வேதாரண்யத்தில் இரு தரப்பு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் உடைக்கப்பட்ட சட்ட மேதை அம்பேத்கரின் சிலை இருந்த இடத்தில் 12 மணி நேரத்திற்குள் புதிய சிலை அமைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜகாளி காட்டை சேர்ந்தவர் பாண்டியன். முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்தவரான இவருக்கும், ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வந்தது. அதன் வெளிப்பாடாக நேற்று 25 ம் தேதி பாண்டியன் தனது பொலிரோ காரில் வேதாரண்யம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தேவேந்திர குல சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மீது கார் மோதியது. காயமடைந்த ராமச்சந்திரனை மீட்டு அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த தகவலை அறிந்த அவரது உறவினர்களும், சமூகத்தினரும் திரண்டு வந்து காவல் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பாண்டியனின் காரை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த முக்குலத்து புலிகள் அமைப்பினர் பலரும் ஒன்று திரண்டு பேருந்து நிலையத்தின் வாசலில் இருந்த அம்பேத்கர் சிலையை பட்டப்பகலில் அடித்து உடைத்தனர். இந்த கொடுமையான சம்பவத்தை கண்ட பலரும் கோபம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ஓ எஸ் மணியன் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து தரப்பு தலைவர்களையும் அழைத்து கேட்டுக்கொண்டார். பிறகு காவல்துறையினரிடம் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வழிகளை கேட்டறிந்த அமைச்சர், இது குறித்து முதல்வர் பழனிச்சாமிக்கு நிலைமையை எடுத்துச்சொன்னார். அதோடு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து ஆறடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலையை வேதாரண்யத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இந்த சிலையை அம்பேத்கர் சிலை இருந்த அதே இடத்திலேயே கிரேன் மூலம் பதித்து பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன.
சிலை உடைக்கப்பட்ட 12 மணி நேரத்தில் புதிய சிலை அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.