பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி சுங்கச்சாவடி அருகே, காரில் ரூ.2 கோடி பணம் சிக்கியது தொடர்பாக குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அந்தோணி, மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தங்கதுரை (இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்), திருச்சியை சேர்ந்த பிரபாகரன் , மாநில துணை செயலாளர், திண்டுக்கல்லை சேர்ந்த தங்கம் , சென்னை கே.கே.நகரை சேர்ந்த கார் டிரைவர் மாரஸ் கிளைவ் (40) ஆகிய 4 பேர் மீதும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை எடுத்து செல்லுதல், வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக பணம் கடத்துதல், குற்றம் செய்ய முயற்சி, தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்பட 7 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ‘எல்பின்’ என்ற நிறுவனத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் திருச்சி வருமான வரித்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 10 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டு திட்டங்கள், ஆன்-லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக பிரிவு மாநில துணைச் செயலாளர் ராஜா, அச்சு ஊடக பிரிவு மாநில துணைச் செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள்.
இதில் ரமேஷ்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது.. ஏற்கனவே என் சகோதரை ரவடிகும்பல் கடத்தி மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் நாங்கள் புகார் கொடுத்து சிலரை கைது பண்ண வைத்தோம் அதிலிருந்தே எங்களுக்கு தொடர்ச்சியாக ரவுடிகளிடம் இருந்து மிரட்டல் வந்து கொண்டுடே இருந்ததால் நான் பணத்தை யாருக்கும் தெரியாமல் கணக்கிலே காட்டாமல் வைத்திருந்தேன். இது தெரியாமல் கட்சித்தோழர்கள் காரை எடுத்து சென்று விட்டனர். இந்த பணம் முழுக்க என்னுடைய பணம் தான். அதற்குள்ளாக இது திருமாவளன் தேர்தலுக்கு கொண்டு சென்ற பணம் என்றெல்லாம் தவறாக திட்டமிட்டு பரப்பிட்டு விட்டார்கள். இந்த வழக்கில் கைதான 4 பேரை நீதிபதி ஜாமீனில் விடுதலை செய்துள்ளார் என்றார். சட்டப்படி போலிஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் என்றார்.