![Sriperumbudur women's struggle... Case registered against 22 people!](http://image.nakkheeran.in/cdn/farfuture/NnmCIRVgMct_iUA79bWKTTAGKEQK8DujUDWurftJ5RE/1639883057/sites/default/files/inline-images/w4_1.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் தொழிற்சாலை அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை. கொடுக்கப்பட்ட உணவு நஞ்சானதால் சக பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முறையிட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் முதல் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் பெண்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வந்து விளக்கங்கள் அளித்ததோடு, வதந்திகளை நம்ப வேண்டாம் என சிகிச்சை பெற்றுவரும் இரண்டு பெண்களிடம் வீடியோ காலில் பேசியும் அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இப்படி தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமே போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட முக்கிய காரணமாக இருந்த 22 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.