இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு டன் பீடி இலைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சங்குமால் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி கொண்டு இருந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மூட்டை மூட்டையாக சுமார் ஒரு டன் அளவிற்கு பீடி இலைகள் இருப்பதை அறிந்த அதிகாரிகள் பீடி இலைகளையும் வாகனத்தையும் அதிலிருந்த இரண்டு பேரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பகுதியில் இருந்து சண்முகம் என்பவருக்கு பீடி இலைகள் கொண்டு வந்ததாகவும், ஆனால் தற்பொழுது அவர் கைபேசியை எடுக்காத நிலையில் அவர் கொண்டு வரச் சொன்ன பகுதியில் அவருக்காக காத்திருந்ததாக வாகனத்தில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் தெரிவித்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சண்முகம் என்பவரை தற்பொழுது தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்தது போதை பொருள், கடல் அட்டை, உரம், தொடர்ந்து கடத்திச்செல்லப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பீடி இலைகள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.