![Sri Lankan patrol ship collision ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/YKU9q54x4AIMztpnJqr7Tr-NVSwmdj_b_6Nf7VqEYrU/1634634823/sites/default/files/inline-images/033.jpg)
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழ்நாடு மீனவர் ஒருவர் மாயமான சம்பவத்தில் தேடப்பட்டுவந்த மீனவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இந்த சம்பவத்தில் மீனவர்கள் சுகந்திரன், சேவியர் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய ராஜ்கிரண் என்ற மீனவரைக் காணவில்லை என தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில், மீனவர் ராஜ்கிரணின் உடல் நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சுகந்திரன், சேவியர் ஆகியோருடன் கைப்பற்றப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நாகை மாவட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.