!['The spirit of 62 people will not leave those two people alone' - ADMK Jayakumar interviewed](http://image.nakkheeran.in/cdn/farfuture/whauUdltREPHjRkgWy6tZOo4bWcUUC_p2KJlUfbpyH0/1719232484/sites/default/files/inline-images/a72316.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அதேபோல் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், ''இந்த அரசு நினைத்திருந்தால் இந்த கள்ளச்சாராய மரணத்தை தடுத்திருக்கலாம். ஆனால் திமுக அரசு இதில் அக்கறை காட்டவில்லை. எக்கேடு கெட்டுப் போனால் என்ன என நமக்கு வேண்டியது மூன்று தான் கமிஷன்; கலெக்சன்; கரப்ஷன் என இந்த மூன்றும் இருந்தால் போதும் என யார் குடித்தால் என்ன; யார் சத்தால் என்ன; சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வந்தால் என்ன; ஆள் கடத்தல் நடந்தால் என்ன; கட்டப்பஞ்சாயத்து நடந்தால் என்ன என விட்டு விட்டார்கள். அப்படித்தான் இன்று முதல்வருடைய செயல்பாடுகள் இருக்கிறது. அப்படித்தான் அரசாங்கத்தின் செயல்பாடும் இருக்கிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் அங்குச் சென்று பார்த்துவிட்டு இரண்டு மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை எனத் தெரிவித்தார். மெத்தனால் என்பது ஒரு கொடிய விஷம். அதைச் சாப்பிட்டாலே கண் போய்விடும். உடலுறுப்புகள் செயலிழக்கும். அந்தக் குறிப்பிட்ட இரண்டு மருந்துகள் இருந்தால் உயிரிழப்பு கண்டிப்பாகக் குறைந்திருக்கும். அந்த மருந்துகள் மருத்துவமனையில் இல்லை எனச் சுட்டிக்காட்டினால் அதை ஒற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு வியாக்கியானம் செய்து 62 பேர் உயிரிழந்துள்ளனர். 62 பேரின் ஆவி மருத்துவத்துறை அமைச்சர் மா.சுவையும், ஸ்டாலினையும் விடாது சும்மா விடாது. இரவில் வந்து உங்களால்தான் செத்தோம் எனச் சொல்லி மிரட்டும். அப்படித்தான் ஆகும் நிலைமை. எதிர்க்கட்சி சுட்டிக் காட்டினால் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். ஒத்துக் கொள்ளும் தன்மை திமுகவிற்கு கிடையாது'' என்றார்.