நூல்களுக்கான செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலையேற வைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு நெருக்கடி ஏற்பட்டதால் விசைத்தறிகளின் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டு இயக்கங்கள் முடக்கப்பட்டதால் அதையே நம்பியுள்ள விசைத்தறி நெசவாளர்களின் ஜீவாதாரம் அந்தரத்தில் ஊசலாடத் தொடங்கியிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுவதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் பயனடைகின்றன. இவைகளின் நைஸ் ரக 60 கவுண்ட் நூல்களின் மூலமாக புடவைகள் தரம் மிக்கதாகத் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு காலம் காலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.
மட்டுமல்ல குறிப்பாக குடியாத்தம், ஈரோடு, சேலம், குமாரபாளையம், பள்ளிபாளையம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தேசத்தில் அரசை எதிர்பாராத சுயவேலை வாய்ப்பான விவசாயத்திற்கு அடுத்த நிலையிலிருக்கும் மிகப்பெரிய சுயவேலை வாய்ப்பாக இருப்பது விசைத்தறிகள். 6 லட்சம் விசைத்தறிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 75 லட்சம் நெசவாள குடும்பங்களின் வாழ்வாதாரான ஜீவாதாரம் அண்டியிருக்கும் தனிப்பெரும் சந்தை இத்தொழில்.
இதன் மூலம் சுமார் 44 ஆயிரம் கோடியளவு வருடம் ஒன்றிற்கு ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு 2 ஆயிரத்து 200 கோடி அளவு ஜி.எஸ்.டி.யும். சுளையான வருமானம் கிடைக்கிறது. பல்வேறு வகைகளிலும் அரசுக்கு பயனுள்ள வருவாயை ஈட்டித்தரும் இந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழில் தற்போது அபரிமிதமான நூல் விலை ஏற்றம் காரணமாக கடும் நெருக்கடியைச் சந்தித்ததால் கடந்த மூன்று நாட்களாக சங்கரன்கோவில் நகர முழுமைக்கும் விசைத்தறிகளின் கூடங்கள் முற்றிலும் அடைக்கப்பட்டன. இதனால் அதனை நம்பியுள்ள 40 ஆயிரம் நெசவாளக் குடும்பங்களின் ஜீவாதாரம் கேள்வியாகி விட்டது.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் செயலாளருமான சுப்பிரமணியன் கூறியதாவது, "பஞ்சின் விலை குறைவாகவே இருந்து போதிலும் பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி நூல் விலை 60% கடுமையாக ஏற்றப்பட்டுவிட்டதால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது ஏறிய நூல் விலைக்கு ஏற்ப புடவைகளின் விற்பனை விலை கிடைக்காமல்போனதால் வாரத்தில் கடைசி மூன்று நாட்கள் விசைத்தறி கூடங்களின் உற்பத்தியை நிறுத்தி விட்டோம்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு நூல் உற்பத்தியாளர்கள் விசைத்தறி சங்கங்கள், அரசு தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து நூல் விலையைக் கட்டுப்படுத்தி ஜவுளி உற்பத்தி மற்றும் நெசவாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்ற சுப்பிரமணியன், தீர்வு இல்லாத பட்சத்தில் எங்களின் போராட்டம் விரிவடையும்" என்றார்.