விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வழிவிடுமுருகன் என்பவருக்குச் சொந்தமான, ‘சென்னை உரிமம்’ பெற்ற RKVM பட்டாசு ஆலையில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று, பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. அப்போது, தரைச்சக்கரம் உற்பத்தி செய்த அறையில், மருந்து உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு, குமார், பெரிய மாடசாமி, வீரகுமார் என்ற செல்வம், முருகேசன் ஆகிய 4 பேர் பலியானார்கள். முனியாண்டி, கோபாலகிருஷ்ணன், முருகேசன், வேல்முருகன், காளியப்பன், அழகர்சாமி உள்ளிட்ட 8 பேர் காயமுற்று, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரை பிடித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசு விபத்துகளை தடுக்க தனிக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு விபத்துகளை தடுப்பதற்காக தமிழக அரசு தனிக் குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.