Skip to main content

ஆளுநர் மீதே ஐயத்தின் நிழல் படிந்துள்ளதால் உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு  அமைத்து விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

Published on 17/04/2018 | Edited on 17/04/2018
thiruma

 

பேராசிரியை நிர்மலா தேவி பிரச்சனையில் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்திடுக என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்த அவரது அறிக்கை: ‘’விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி தன்னிடம் பயிலும் மாணவிகள் நான்கு பேரைத் தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பேசியதாக வெளியான தொலைபேசி உரையாடலில் கல்வித் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளையும் தமிழக ஆளுநரையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இந்தப்பிரச்சனையில் உயர் அதிகாரப் பதவிகளை வகிக்கும் பலரது தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தன்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவசர அவசரமாக ஆளுநர் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

 

ஆளுநர் மீதே ஐயத்தின் நிழல் படிந்துள்ளதால் இந்த வழக்கை தமிழக காவல்துறையோ மத்திய புலனாய்வு அமைப்போ விசாரிப்பது முறையல்ல. எனவே, உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து இதை விசாரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

 

தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையில் ஊழல் மலிந்திருப்பதாகப்  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முன்னாள் துணை வேந்தர்கள் பலர் ஊழல் புகார்களின் கீழ் கைது செய்யப்படுவது இதை உறுதிப்படுத்துகிறது. பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கப்படுவதாகவே இதுவரை புகார் இருந்து வந்தது. ஆனால், மாணவிகளைத் தவறான வழியில் பயன்படுத்துகிற அதிர்ச்சித்தரும் குற்றச்சாட்டு இப்போது தான் வெளியே வந்துள்ளது. 

 

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளை குறிவைத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இதை மிகவும் விரிவான பின்னணியில் நாம் அணுக வேண்டும். பெண்கள் உயர்கல்வி பயில்வதற்கு அஞ்சுகிற நிலைமையை இது ஏற்படுத்தியுள்ளது. இதை தனிப்பட்ட ஒரு சம்பவமாகப் பார்க்காமல் உயர்கல்வித் துறையில் நிலவும் சீர்கேட்டின் அடையாளமாகப் பார்க்க வேண்டும். தமிழக அரசு உயர்கல்வித் துறையின் அவல நிலையை ஆராய்ந்து தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்கு நாடறிந்த கல்வியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.’’ 

 

சார்ந்த செய்திகள்