வறட்சி மாவட்டங்களில் முதன்மையானது புதுக்கோட்டை. 30 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை மாவட்டம். காட்டாறுகள், ஏரி குளம், கன்மாய் அத்தனையும் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், காடுகளை அழித்து ஆக்கிரமித்தாலும் வந்த வினையோடு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளும் கிராமங்களை கண்டுகொள்ளாமல் மணல் திருடர்களுக்கு துணையாய் நின்று ஆநுகளை பொட்டல்களாக்கி கருவேல மரங்களை வளரவிட்டதாலும், நீர்நிலைகளில் எந்த வேலையும் செய்யாமலே தூர்வாரியதாக பணம் மட்டும் எடுத்துக் கொண்டே இருப்பதாலும் நாளுக்கு நாள் நீர்நிலைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதன் விளைவு இன்று குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடிதண்ணீர் கூட இல்லாத கிராமங்களுக்கு எங்கள் பெண்களை எப்படி கல்யாணம் செய்து கொடுக்க முடியும் என்று அடுத்தடுத்த கிராம உறவுகளும் கேட்கத் தொடங்கிவிட்டதால் இளைஞர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.
இந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் உள்ள கடைக்கோடி விவசாய கிராமங்கள் தென்னமாரி - மங்களம். மழை பெய்து கன்மாய்களில் தண்ணீர் நிறைந்தால் வழக்கமான நெல் விவசாயம். அதன் பிறகு கால்நடைகள் வளர்ப்பதும் கூலி வேலைக்கு செல்வதுமே வழக்கம்.
பல ஆண்டுகளாக குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று மக்களின் தாகக் குரல் கேட்டு 2013 ம் ஆண்டு அந்த கிராமத்தில் சிறுமின்விசை தொட்டியுடன் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. சில மாதங்களில் தண்ணீர் இல்லை. அடுத்து மாற்று வழி செய்யுங்கள் என்று ஒவ்வொரு மனுநீதி நாளுக்கும் மாவட்ட ஆட்சியரை மனுவோடு மக்கள் சந்திப்பதே வழக்கமாகிவிட்டது. கடந்த ஆண்டு 5 கி.மீ அந்தப்பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர குழாய் புதைத்தார்கள்.
குழாயடியும் அமைத்தார்கள். நமக்கும் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று கிராம மக்கள் காத்திருந்தனர். 15 நாட்கள் இடைவிடாத பணிகள் நடந்தது. அப்பறம் பாதியில் போட்டுவிட்டு போனவர்களை காணவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் அந்த கிராம மக்கள் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். ஓட்டுக் கேட்கச் செல்லும் வேட்பாளர்கள் உடனே தண்ணீர் வரும் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுகளை வாங்குவதுடன் அதன் பிறகு அந்த கிராமங்களை மறந்து போகிறார்கள்.
தாகம் தணிக்க.. 3 கி. மீ. மோட்டார் சைக்கிள்களில் குடங்களுடன் கிளம்பும் இளைஞர்கள் ஆய்க்குடி கிராமத்தில் இருந்து சில குடங்கள் தண்ணீரை கொண்டு வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் இல்லா வீடுகளில், ஆண்கள் இல்லாத வீடுகளில் குடிக்க தண்ணீருக்கு என்ன செய்கிறார்கள்..?
அதிகாலையிலேயே காலிக்குடங்களுடன் ஊரின் ஓரமாக உள்ள மராமத்து செய்யப்படாமல் பாசி படர்ந்து சிறிதளவே கிடக்கும் மழைத் தண்ணீரை தூக்கி வந்து வடிகட்டி குடிக்கவும், சமைக்கவும், குளிக்கவும், கால்நடைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். பல வருட போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டே போகிறது.
இது குறித்து அந்த கிராம இளைஞர்கள்.. பாவப்பட்ட ஊராக நாங்கள் இருக்கிறோம். நாங்க மட்டுமல்ல ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் பல கிராமங்கள் இப்படித்தான் தண்ணீர் இல்லாத கிராமங்களாக உள்ளது. ஆய்குடிக்கு தண்ணீர் எடுக்க போய் வந்து தான் பள்ளி, கல்லூரிகளுக்கு போகனும். அதனால தாமதம் எற்படும். நாங்க இல்லன்னா பெண்கள் 4 கி.மீ நடந்து போய் தண்ணி எடுத்து வருவாங்க. அதே போல ஊர் குளத்தில காலை 8 மணிக்குள்ள பள்ளிக் குழந்தைகளை கிளப்பிவிட்டுட்டு தண்ணி தூக்க போகனும்.
இல்லன்னா நாங்க வளர்க்கிற ஆடு, மாடுகள் அந்த தண்ணீரை குடித்துவிட்டு கலக்கிவிட்டு போய்விடும். அதனால காலையிலயே குளத்தில் தண்ணீர் எடுக்கனும். அந்த தண்ணியில தான் சமைக்கனும், குடிக்கனும் வேறு வழியில்லை. இப்ப குளத்திலும் தண்ணீர் இல்லை. சேறும் சகதியுமா இன்னும் சில நாட்களுக்கு தான் தண்ணீர் இருக்கும். அப்பறம் அதுவும் இருக்காது என்றவர்கள்.
எங்க ஊருக்கு பக்கத்து ஊர்கள்ல இருந்து எங்க உறவுக்காரங்களே பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க. குடிக்க தண்ணி இல்லாத ஊர்ல எங்க புள்ளை வந்து கஷ்டப்படனுமானு கேள்வி கேட்கும் போது நாங்க பதில் சொல்ல முடியாம தலையை தொங்கப் போட்டு திரும்புறோம் என்றனர் வேதனையாக.
தென்னமாரி – மங்களம் கிராம மக்களின், இளைஞர்களின் தாகத்தையும், வேதனையையும் இந்த அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் எப்போது தான் தீர்ப்பார்கள்.