Skip to main content

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ஊழல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி திமுக வழக்கு

Published on 24/08/2018 | Edited on 25/08/2018
Eps


நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் 4800 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்திவருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.-யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

நெடுஞ்சாலை மற்றும் பராமரிப்பு திட்டங்களை முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன் செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு 4800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் தண்டிக்க வேண்டுமென புகாரில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுக்காததால், தங்கள் புகாரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிப்தி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தனக்கு வந்த புகாரை, ஜூன் 22ஆம் தேதி டி.எஸ்.பி.-க்கு அனுப்பியுள்ளார், அதனடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும், ஆரம்பகட்ட விசாரணையை முடிக்க 3 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஆரம்பகட்ட விசாரணையை 2 மாதத்தில் முடிக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்பு துறை விதிகளும், 7 நாட்களில் முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற விதிகளும் உள்ளது.ஆனால் இதுவரை டி.எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

அப்போது நீதிபதியும் குறுக்கிட்டு, இரண்டு காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் அறிக்கை வரவில்லையா என கேள்வி எழுப்பியதுடன், வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்