
கோவையில் இருந்து சேலம் வரை அரசு விரைவு பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. இந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஒருவர் பணத்தை எண்ணியவாறே பேருந்தை ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “இந்த சம்பவமானது, நேற்று (29.03.2025) இரவு நடந்தது. இந்த பேருந்து கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரை செல்லும் நடத்துநர் இல்லாத பேருந்து சேவையாகும். பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்கிய பிறகு நடத்துநர், இறுதிப் பயணநடை என்பதால் ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு கணியூர் சுங்கச்சாவடியில் இறங்கிவிட்டார்.
ஓட்டுநர் பேருந்தை இயக்குவதற்கு முன்பு பணத்தை எண்ணியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர் பேருந்தை இயக்கும் போது எண்ணினார். எனவே, இந்த குறிப்பிட்ட ஓட்டுநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அனைத்து ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பாகப் பேருந்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.