Skip to main content

சமூகநீதி நாள்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துரைமுருகன் புகழாரம்!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

h


பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சில அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (06.09.2021) சட்டப்பேரவையில் வெளியிட்டார். பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வரவேற்று பேசினார்கள். இறுதியாக பேசிய அவை முன்னவர் துரைமுருகன், இந்த அறிவிப்பு வெளியிட்ட முதல்வரை வெகுவாக பாராட்டினார்.

 

இதுதொடர்பாக பேசிய அவர், "கலைஞரின் சுயமரியாதை உணர்வு, முதலமைச்சர் இந்த அறிவிப்புகளை வாசிக்கும்போது தெரிந்தது. திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. துரோகிகள் தோன்றினால்தான் அழிக்க முடியும். ஆனால் அதுவும் தோன்ற முடியாது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க பரப்புரையில் திடீர் எண்ட்ரி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்; அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Durai Murugan who made a sudden entry in the BMC lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது. 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !