"பிறந்தோம்.! இறந்தோம்.!! என்பதனை விட இதற்கிடையில் இதை சாதித்தோம்" என்கிற கேள்விக்கு பதிலாய், தன்னுடைய ஓய்வூதிய பலனில் அரசு தொடக்கப்பள்ளிக்கு கலையரங்கம் கொடுத்துள்ளார் மின்வாரிய ஊழியர் ஒருவர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் போர்மேனாகப் பணியாற்றி வந்த இவர் கடந்த மாதத்தில் ஓய்வு பெற்றார். இவ்வேளையில், கடந்த சனிக்கிழமையன்று ஓய்வூதிய பலனின் ஒரு பகுதி இவருக்கு வந்தடைய, தன்னுடைய ஓய்வூதிய பலனில் ஒரு பகுதியையாவது சமூகத்திற்கு செய்யவேண்டுமென தன்னுடைய மனைவி கஸ்தூரி தலைமையாசிரியராக பணிபுரியும் பிரான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அணுகியுள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் தரப்போ பள்ளி மேலாண்மை குழுவுடன் கலந்தாலோசித்து, "பள்ளிக்கென தனியாக கலையரங்கம் கட்டித்தர வேண்டுகோள் விடுக்க, அதற்கு உடன்பட்டு கலையரங்க கட்டம் இசைந்துள்ளார் ராமச்சந்திரன். இன்று பேசி, நாளை ஆரம்பிக்கலாம் என்பதனை தவிர்த்து உடனடியாக ஆட்களை வரவழைத்து பணியினை துவங்கியுள்ளது பள்ளி மேலாண்மைக்குழு. இதே வேளையில், தனி நபர் ஒருவரின் கலையரங்கப்பணியினை கேள்விப்பட்ட கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும் பள்ளிக்கென ஸ்மார்ட் வகுப்புகள் கட்ட முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
"சிங்கம்புணரி ஒன்றியத்திலே அதிகளவு எண்ணிக்கை மாணாக்கர்களை கொண்டது இப்பள்ளியே.!! ஓய்வுப்பெற்றவரின் முயற்சி பலரை பள்ளிக்கு உதவி செய்ய அழைத்து வந்துள்ளது. அது பாரட்டத்தக்கதே.!" என்கிறார் பள்ளியின் சக ஆசிரியரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளருமான முத்துப்பாண்டியன்.