திருப்பதியில் லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் சில வதந்திகள் பரவியது. அதாவது திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கும் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் வாங்குவதாகச் சந்தேகம் இருப்பதாகத் தமிழக பாஜகவின் நிர்வாகிகளான வினோஜ் பி செல்வம், செல்வகுமார் ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதற்குப் பதிலளித்த தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, ஆவின் நிறுவனத்திடம் இருந்து பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் வாங்கப்படுவதாகத் தெரிவித்து பஞ்சாமிர்தம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதோடு பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் மீது இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் பழனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பழனி பஞ்சாமிர்தம் குறித்து வலைத்தள பக்கத்தில் தவறாகப் பரப்பிய பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோவிலின் செயல் அலுவலர் அருண்பாண்டியன் என்பவரும் சோமரசம்பேட்டை போலீசாரில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (26.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, “பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார் தனது செல்போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய செயலுக்கு செல்வகுமார் சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவை நீக்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், சமூக வலைத்தளங்களில் இருருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்” என எச்சரிக்கை விடுத்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.