
புவனகிரி அருகே பெருமாத்தூரில் வாழைநாரில் பூ மட்டுமே கட்டமுடியும் என்பதை மாற்றும் வகையில் ஸ்வெட் பயிற்சி நிறுவனம் சார்பில் வாழைநாரைக் கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரித்து ஏழை பெண்கள் திறன் மேம்பாட்டை வளர்த்துக்கொள்ளவும் அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்திக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குத் திட்ட இயக்குநர் விக்டோரியா தலைமை தாங்கினார். ஸ்வெட் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வேளாங்கன்னி, வாழைநாரை கொண்டு எவ்வாறு வீட்டு உபயோகப் பொருட்களான கூடை, கைப் பை, இரவு விளக்கு, கால்மிதி, ட்ரே உள்ளிட்ட பொருட்களைத் தயாரிப்பது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம் விளக்கிக்கூறி இதன் மூலம் எவ்வாறு வாழ்வாதாரம் மேம்படுத்திக்கொள்ளலாம் என்றும் பேசினார்.

பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அப்சரா அனைவரையும் வரவேற்றார். இயக்குனர்கள் ஜான்கண்ணையன், கல்பனா இருவரும் பயிற்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகாசினி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பயிற்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு வாழைநாரை எப்படிப் பதப்படுத்துவது. பிரித்து எடுப்பது குறித்தும் பொருட்கள் தயாரிப்பு முறை குறித்தும் செய்துக் காண்பிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட பெண்கள் இந்த பயிற்சி மிகவும் எளிதாக உள்ளதாகவும். அதிக முதலீடும் இல்லாமல் வீணாக கீழே போடும் வாழைநாரைக் கொண்டு வருமானம் பெறமுடியும் என்பது பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினர்.