சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் எச்.ராஜா கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
இரவு 8 மணிக்கு கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவருடன் அணிவகுத்து வந்த போலீஸ் வாகனம் உள்பட அனைத்து வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் ஒரு காரில் அவசரமாக செல்ல வேண்டியவர்கள் வழி கேட்டு ஹாரன் அடிக்க அங்கு நின்ற போலிசார் அந்த கார் ஓட்டுநரை திட்டிக் கொண்டே அடிக்க பாய்ந்ததுடன் கார் சாவியை பறித்தனர். இந்த சம்பவத்தை சில இளைஞர்கள் படம் எடுத்ததால் சாவிவை திருப்பிக் கொடுத்தனர்.
இரவு 9 மணிக்கு கொத்தமங்கலம் செல்வதாக இருந்ததால் அந்த கிராமத்தில் கூட்டுறவு சங்கத் தலைவர் பாண்டியன் தலைமையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டதுடன் கோயிலில் பரிவட்டம் கட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆவணம் பாய் வீட்டு குதிரை வண்டியில் எச்.ராஜ வை கடைவீதி வரை சுமார் ஒரு கி. மீ. ஊர்வலமாக அழைத்துச் செல்ல ரூ 11 ஆயிரம் செலவு செய்து சாரட் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வண்டி வரை சென்றவர் அந்த வண்டியில் ஏறாமல் பிரச்சார வாகனத்தில் வருவதாக ஏறிக் கொண்டார். அதனால் சாரட் வண்டி முன்னால் செல்ல பின்னால் எச். ராஜா வந்தார்.
வரும் வழியில் எம். ஜி. ஆர். ரசிகரும் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளருமான மாணிக்கவாசகம் கட்டி வைத்துள்ள எம். ஜி. ஆர் சிலைக்கு சால்வை போடுங்கள் என்று மாணிக்கவாசகம் பிரச்சார வாகனத்தை நிறுத்தி சால்வையையும் கொடுக்க, நேரமாச்சு என்று சொல்லி எம். ஜி. ஆர் சிலைக்கு சால்வை அணிவிக்காமலேயே கடைவீதிக்கு சென்றார்.
கடைவீதியில் பேசும் போது.. வழக்கம் போல ப .சிதம்பரம் குடும்பத்தினர் மீது வழக்கு உள்ளது என்றவர், ஆலங்குடி தொகுதியை தத்தெடுப்பேன். குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க ரூ 7 ஆயிரம் கோடியில் காவிரி குண்டாறு இணைக்கப்படும் என்றவர், ஓட்டு மெசின்ல இரட்டை இலை இருக்காது என்று அவர் சொல்லும் போது சலசலப்பு ஏற்பட்டது. இந்த தொகுதியில் தாமரை சின்னம் தான் இருக்கும். அதனால் எல்லாரும் தாமரைக்கு ஓட்டு போடுங்க என்றார்.