சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுள்ளாம்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் குமார். 40 வயது விவசாயியான இவர் அதிமுக- வில் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பதவி வகித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவில் எஸ்.புதூரிலிருந்து சுள்ளாம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு டூவீலரில் வந்துக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் டூவீலரை நிலைகுலைய செய்து கண்மூடித்தனமாக தலையில் அடித்து தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயத்துடன் சாலையில் கிடந்த குமாரை மீட்ட பொதுமக்கள் அவருடைய குடும்பத்தாருக்கு தகவல் கூற, விரைந்து வந்த அவரது சகோதரர் வீரமணி முதற்கட்ட சிகிச்சைக்காக எஸ்.புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்குள்ள மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குமார் மரணமடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உலகம்பட்டி போலீசார் திருப்புத்தூர் டிஎஸ்பி அண்ணாத்துரையின் அறிவுரையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். "பெண் விவகாரத்தால் தான் அடித்துக் கொலைச்செய்யப்பட்டார் குமார்.?" என முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் கசிய இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.