
கடலூரில் பல இடங்களில் ஒரே நாள் இரவில் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கஞ்சா இளைஞர்கள் சிலர் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையானது தற்பொழுது முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அச்சாலையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுநர்கள் அயர்ச்சி காரணமாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் லாரியை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனங்களில் வரும் போதை இளைஞர்கள் லாரி ஓட்டுநர்களை தாக்கி அவர்களிடம் இருக்கும் பணம், செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று மட்டும் ஒரேநாள் இரவில் எம்.புதூர், பெரியப்பட்டு, ஆணையம்பேட்டைமூன்று இடங்களில் இதுபோன்ற லாரி ஓட்டுநர்களிடம் பணம், செல்போன் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளது. சில ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதிலும் இந்த சம்பவங்களில் கஞ்சா போதையில் சுற்றித் திரியும் சிறுவர்களும் ஈடுபடுவதாக அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கையில் இருக்கும் பணத்தை பறிப்பதோடு ஜிபே உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தால் அதனுடைய பாஸ்வேர்டுகளையும் கேட்டு அதன் மூலமும் பணத்தைப் பறித்துச் செல்வதாக லாரி ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். லாரி ஓட்டுநர்கள் மட்டுமல்லாது தனியாக செல்லும் நபர்களையும் வழிமறித்து இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. நேற்று தாக்குதலுக்கு உள்ளான லாரி ஓட்டுநர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.