'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.