Skip to main content

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு த.வெ.க. பூத் கமிட்டி கூட்டத்தில் அனுமதி மறுப்பு!

Published on 27/04/2025 | Edited on 27/04/2025

 

Those under the age of 18 are denied entry to the tvk Booth Committee meeting

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் நேற்று (26.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தில் தவெக அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சிப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய் அக்கட்சியின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து வாக்குச்சாவடி முகவர்களிடம் உரையாடினார். இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் (27.04.2025) பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இரண்டாம் நாளில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய அக்கட்சியின் 13 நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி 2ஆம் நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விஜய் இன்று மாலை கோவையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்ப உள்ளார்.

முதல் நாள் கூட்டத்தில் சுமார் 100 குழந்தைகள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பாதுகாப்புப் பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு கடும் சோதனைக்குப் பின்னரே உரிய அனுமதிச் சீட்டை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “த.வெ.க. பூத் கமிட்டியில் வாக்களிக்கும் வயதிற்கும் குறைவானவர்கள் (சிறுவர் - சிறுமிகள்) கூட நிறையப் பேர் காணப்பட்டார்கள். எனவே குழந்தைகள் அணி என்பதை விடுவிக்க வேண்டும். குழந்தைகளை அரசியலுக்குக் கொண்டு வரலாம். ஆனால் படிக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும்” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்