
சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக புறவழிச் சாலை பகுதியில் ரூ.23 கோடியில் அமைக்கப்படும் பேருந்து நிலையப் பணிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
சிதம்பரம் நகரம் ஆன்மீக நகரமாகும். இங்கு நடராஜர் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளதால் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். வாகன வரத்து அதிகமாக உள்ளதால் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார். அதே போல் சிதம்பரம் பழைய பேருந்து நிலையத்தில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த பேருந்து நிலைய கட்டிடங்கள் சிதலமடைந்து இருந்ததால் அதனை முழுவதும் இடித்துவிட்டு நவீன வடிவில் ரூ. 4.5 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனையும் அவர் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிதம்பரம் புதிய பேருந்து நிலைய பணிகள் 8 மாத காலத்திற்குள் முடிவு பெறும். அதேபோல் பழைய பேருந்து நிலையமும் பணிகள் தொடங்க உள்ளது. வெயில், மழை நேரத்தில் பயணிகள் நிற்பதற்காக புதியதாக ஷெட் அமைக்க உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 69 கிலோமீட்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவும் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார். இவருடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், நகராட்சி ஆணையர் மல்லிகா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.