Skip to main content

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி; எல்.இ.டி. திரைகளை அகற்றிய போலீசார்!

Published on 27/04/2025 | Edited on 27/04/2025

 

PM modi MANN KI BAAT program Police remove LED screens

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் ‘மான் கீ பாத்’ என்ற மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். அதன் 121வது பகுதியாக இன்று (27.04.2025) பிரதமர் மோடி உரையாற்றினார். இதனையொட்டி நாடு முழுவதும் ஒளிபரப்ப பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியைத் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் பிரமாண்ட அளவிலான எல்.இ.டி. திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வந்த போலீசார் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்.ஈ.டி. திரையை அகற்றினர். அப்போது அங்கிருந்த பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ‘தடையை மீறி அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தினர் கைது செய்யப்படுவீர்கள்’ என அங்கிருந்த பாஜகவினரை போலீசார் எச்சரித்தனர். மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப பாஜகவினர் முறையாக அனுமதி பெறவில்லை என சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அதே சமயம் இந்த நிகழ்ச்சியை நடத்த போலீசாரிடம் கடந்த வாரமே அனுமதி கடிதம் கொடுத்தோம். ஆனால் அதற்கு போலீசார் உரிய அனுமதியை வழங்கவில்லை என அங்கிருந்த பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மனதின் குரல் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட எல்இடி திரைகள் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது  நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதனையடுத்து பாஜகவினர் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் இருந்தபடி தங்களது செல்போனில் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டனர். 

சார்ந்த செய்திகள்