தமிழ்நாட்டில் கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரபிக் கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்து வரும் இரண்டு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்றும், தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மழை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு, இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்; மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் இணைந்து பயணியாற்ற வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.