தீபாவளி பண்டிகை இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டாலும், இந்தியாவின் வட மாவட்டங்களிலேயே வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் நாளை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், வட மாவட்டங்களில் நாளை மறுநாள் (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து வேலை காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் இன்று மாலை அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
தொழில் நகரமான திருப்பூரில் அதிகளவிலான வட மாநிலத்தவர் பணி செய்துவரும் நிலையில், தீபாவளி பண்டிகையின் காரணமாக அவர்கள் எல்லாம் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான வட மாநிலத்தவர் குவிந்தனர்.
குறிப்பாக கேரளா மாநிலம், ஆலப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் செல்லும் ரயிலுக்காக ஆயிரம் கணக்கானோர் குவிந்ததால், திருப்பூர் ரயில் நிலையமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேபோல், கோவை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.