ஈரோட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு விசைத்தறி தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இரண்டு நாள் கள ஆய்விற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு பயணம் சென்றுள்ளார். இன்று திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்த அவர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்திற்கு சென்று அங்கு ஆய்வில் ஈடுபட்டார். தொடர்ந்து விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடம் தொழிலின் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
750 யூனிட் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அது எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என்பது குறித்து கேட்டு அறிந்தார். மேலும் விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளின் ரகங்கள் மற்றும் அதற்கான விலைகள் சரியாக கிடைக்கிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் அளவிடும் பணியை ஒரு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உங்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.