தமிழகத்தின் 35வது மாவட்டமாக இராணிப்பேட்டை மாவட்டம் உருவாகியுள்ளது. இதற்கான தொடக்கவிழா நவம்பர் 28ந்தேதி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் 35வது மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ள இராணிபேட்டை பற்றிய சுவாரசியமான தகவல்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
கி.பி 1714ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங் என்ற தேசிங்கு மீது ஆற்காடு நவாப் சாதத்துல்லாக்கான் போர் தொடுத்தார். இப்போரில் ராஜா தேசிங்கு வீர மரணமடைந்தார். இத்துயர செய்தியை கேட்ட ராஜா தேசிங்கின் மனைவியான ராணிபாய் உடன் கட்டை ஏறி தன் உயிர் நீத்தார்.
இதனால் இவர்கள் இருவரின் தியாகத்தை மெச்சிய ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் ராஜா தேசிங்கு, அவரது மனைவியான ராணிபாய் ஆகிய இருவருக்கும் ராணிப்பேட்டை பாலாற்றங்கரை ஓரத்தில் பளிங்கு கற்களால் ஆன இரு நினைவுச் சின்னங்களை எழுப்பினார். அத்துடன் தேசிங்கு ராஜனின் மனைவியின் கற்புத்திறனை பறைசாற்றும் விதமாக ராணிப்பேட்டை என்ற நகரையும் நிர்மாணித்தார். ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாய் நினைவாகத்தான் இந்நகருக்கு ராணிப்பேட்டை என பெயர் வந்தது. அதனாலேயே இந்த ஊரின் பெயரில் மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் மைய பகுதி என இராணிப்பேட்டை நகரம் மாவட்ட தலைநகரமாகவும் தேர்வு செய்யப்பட்டது.
இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட வாலாஜபேட்டை, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக1866 தொடங்கப்பட்டது. அதேபோல் தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்ட போது, 1856 ஜூலை 1ஆம் தேதி, சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜா ரோடு வரை இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின், அவரது நினைவாக முதல் சிலை அவர் இறந்த 13 நாட்களுக்குள் ராணிப்பேட்டை நகரத்தில் தான் நிறுவப்பட்டது. அரக்கோணத்தில் ராஜாளி விமானப்படை தளம் உள்ளது. அதேபோல் சோளிங்கர் நரசிம்மபெருமாள் கோயில், அரக்கோணம் இரயில்வே பெட்டி தொழிற்சாலை என பலவும் இம்மாவட்டத்தில் உள்ளன.