கரோனாவுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த சாப்பாட்டு ராமன் எனப்படும் சித்த மருத்துவர் பொற்செழியன் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கூகையூரில் பொற்செழியன், ஸ்ரீ அய்யப்பன் சித்தா கிளினிக்கை நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சித்தா கிளினிக்கில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கிளினிக்கில் இருந்து ஆங்கில சிகிச்சைக்கான மாத்திரைகளைப் பறிமுதல் செய்து கிளினிக்குக்கு சீல் வைத்தனர். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சாப்பாட்டு ராமனை கைது செய்தனர்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பொற்செழியனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர் காவல்துறையினர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். இதனிடையே, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர் 'சாப்பாட்டு ராமன்' பொற்செழியன். இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.