
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொத்தூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அந்த சங்கத்தில் உள்ள 11 இடங்களுக்களுக்கு 20 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். அதில் சிலர் வாபஸ் பெற்றனர். இதன் மூலம் திமுக 5 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த கணேசன் அறிவித்தார்.
அதன் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறும் முன்பு சென்னை உயர்நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதித்திருந்தது. அதனால் அப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆகஸ்ட் முதல்வாரம் அந்த தடையை நீக்கி உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி மீண்டும் கூட்டுறவு தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.

ஆகஸ்ட் 10ந்தேதி கூட்டுறவு சங்கத்தலைவர், துணை தலைவர் தேர்வு செய்ய மீண்டும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தேர்தல் அலுவலர் கணேசன் வெளியிட்டார். அதில் திமுக, அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களின் பெயர் சரியாக இருந்தது. காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற மகேஷ் என்பவருக்கு பதிலாக அதிமுகவை சேர்ந்த தசரதன் என்பவரின் பெயரை சேர்த்து அறிவிப்பு செய்தார்.
இதனால் திமுக மற்றும் காங்கிரஸார் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே வெளியிட்ட பட்டியல் நகல் எங்களிடம் உள்ளது. அப்படியிருக்க புதியதாக எப்படி நீங்கள் ஒரு பட்டியல் வெளியிடலாம், நீங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள், எங்களுக்கு நியாயம் வேண்டும் எனக்கேட்டு திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் அரசு அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதன்பின் கூட்டுறவு சங்க உயர்அதிகாரிகள் வந்து, விசாரணை நடத்துகிறோம், தவறு செய்கிறோம் என வாக்குறுதி தந்து போராட்டத்தை கைவிட வைத்தனர்.