பொதுமக்களிடம் கமிசன் கேட்பதாக பொய் குற்றச்சாட்டை கூறிவரும் பாலபாரதி மீது வழக்குத் தொடர்வேன் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மூன்று ரயில்வே கேட் இருக்கிறது. அதை கடந்து தான் மக்கள் அப்பகுதிகளுக்கு பல வருடங்களாக போய் வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் பணித் தொடங்கிய சில வருடங்களிலேயே அந்த பணியை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றித்தான் டவுன்களுக்கும், குழந்தைகளை பள்ளிக்கு விடக்கூடிய அவலநிலைக்கு ஆளாகினர். இந்த விசயம் முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதிக்கு தெரியவே அப்பகுதி மக்களை திரட்டி கடந்த 12ம் தேதி மாவட்;ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் குதித்தார்.
அப்போது இந்த பணி காலதாமதமாக இருப்பதற்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தான் காரணம். கமிசனுக்காக பணியை செய்யவிடாமல் கிடப்பில் போட்டுவிட்டார் அமைச்சர் சீனிவாசன் என குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த விசயம் மாவட்ட கலெக்டர் வினயின் காதிற்கு எட்டவே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர் பாலபாரதியை உடனே கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடரும். நிலம் கொடுத்தவர்களுக்கும் உடனடியாக பணம் கொடுக்கவும், ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டத்தை தோழர் பாலபாரதி கைவிட்டார்.
இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விடுத்துள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது...
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி இந்த மேம்பால பணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகையினை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நான் கமிசன் கேட்டு தாமதப்படுத்தி வருவதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் லாபத்திற்காக கூறி வருகிறார். இது முற்றிலும் வடிகட்டிய பொய், உண்மைக்கு புறம்பானது கடந்த 2016ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் போது மாவட்ட நிர்வாகம் அப்போதைய சந்தை மதிப்பான நகர்ப்புற பகுதிக்கு 225 சதவீதமும், கிராமப்புற பகுதிக்கு 275 சதவிகிதமும், நில உரிமையாளர்களுக்கு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் சென்னை நில நிர்வாக ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.
இது வெளிப்படையான ஒன்று. அதன்படி திண்டுக்கல் கோட்டாட்சியர் வங்கிக்கணக்கில் 31கோடியே 91லட்சம் ஒதுக்கீடு செய்து வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017 தமிழக அரசு சந்தை வழிகாட்டி மதிப்பினை 33 சதவிகிதமாக குறைத்து அறிவித்தது. அதன் காரணமாக சென்னை நில நிர்வாக ஆணையர் பாலப்பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கூடுதல் தொகையினை விடுவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி நானும், மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே நிர்ணயித்த தொகையினை நில உரிமையாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சித்து வருகிறோம்.
நானும் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் தமிழக முதலமைச்சரிடம் வழிவகுத்து வருகிறேன். இந்த நிலையில் நான் கமிசன் கேட்டு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு தொகையினை தாமதப்படுத்தி வருவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுவது அரசியல் லாபத்திற்காக கூறும் அபாண்டமான பொய். பொதுமக்களை திசை திருப்புவதற்காக கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகிறார். இதற்கு பாலபாரதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று தெரிவித்துள்ளார்!