கரூர் மாவட்டத்தில் கல்லூரி விரிவுரையாளர் உள்பட 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்று கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ரத்தப் பரிசோதனை அறிக்கையின்படி உறுதிசெய்யப்பட்டிருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட 2 பேரும் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே பள்ளப்பட்டியில் கரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில், இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவை இருக்கிறதா? எனவும் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.
144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுள்ள நிலையில், வாங்கப்பாளையம் பிரிவு சாலையில் சலூன்கடை திறந்து முடிதிருத்தம் செய்ததாக அருகம்பாளையம் சாலையை சேர்ந்த ரமேஷ், என்பவரை கரூர் போலிஸ் கைது செய்தனர்.
இதே போன்று குளித்தலை சின்னரெட்டியப்பட்டி வெள்ளைச்சாமி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
இதுவரை கரூர் மாவட்டத்தில் 864 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1002 வழக்குகள் பதியப்பட்டு, 1122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.