கோவை ஆர்.எஸ்.புரத்தில் சாலை ஓரம் நடந்து கொண்டிருந்த பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக மோதி தூக்கி வீசி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்பவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலை ஓரமாக லீலாவதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வந்த கார் ஒன்றின் மீது மோதிய மற்றொரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் புகுந்தது. அப்போது நடந்து சென்று கொண்டிருந்த லீலாவதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லீலாவதியை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட ஹூண்டாய் வெர்னா காரை பிடித்த மக்கள் உள்ளே இருந்த நபரை வெளியே இழுத்தனர். அதில் உள்ளே இருந்தது வடமாநில தொழிலதிபர் உத்தம் குமார் என்பது தெரியவந்தது. தான் ஆர்.எஸ்புரத்தில் வசிப்பதாகவும் விபத்தில் சிக்கியவருக்கு அனைத்து உதவிகளையும் நானே செய்கிறேன் என அங்கிருந்த மக்களிடம் கெஞ்சி கூத்தாடினார். அதனைத் தொடர்ந்து உத்தம் குமாரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் அவருடைய ஓட்டுனர் உரிமம் காலாவதியாகி இரண்டு வருடம் ஆகியுள்ளது தெரிய வந்தது. அவரையும், காரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல் ஆய்வாளர், உத்தம குமார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற தகவலை சொல்ல மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
லீலாவதி சிகிச்சைக்கு உதவுவதாகக் கூறிய தொழிலதிபர் உத்தம் குமார் போலீசாருடைய ஆதரவு இருப்பதால் தங்களை ஏமாற்றி விட்டதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக லீலாவதியின் உறவினர் ஒருவர், 'எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கிறேன். எஃப்.ஐ.ஆர் போட வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள். நாங்களும் அதை நம்பி காம்ப்ரமைஸா போயிடலாம் என நினைத்து சரி என்று சொன்னோம். கட்சியில் இருந்தும் வந்து பேசினார்கள். ஆனால் யாருமே இப்பொழுது வரைக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. விபத்தை ஏற்படுத்தியவர் பார்க்கக் கூடவில்லை. அவங்க மீண்டும் பழைய நிலைக்கு வர ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்கிறார்கள். கால் தொடை எலும்பு இரண்டாகி விட்டது. தலையிலும் நல்ல அடி. அவங்களுடைய வாழ்வாதாரத்திற்கு இப்பொழுது என்ன செய்வது' என கேள்வி எழுப்பினார்.