தைப்பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிரழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாகவே தலைப் பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கனிகள் மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் வழக்கமான காய்கனிச் சந்தைகள் தவிர பல்வேறு பொது இடங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் பொங்கல் பொருள்கள் விற்பனை கடைகள் முளைத்துள்ளன.
கரும்பு, பனைஓலை, பனங்கிழங்கு, அடுப்புகட்டி, மண்பானை, காய்கனிகள் உள்ளிட்டவைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. இதே போல் பாளை, டவுண் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளிலும் காய் கனிகள் லாரிகளிலும், சிறிய வாகனங்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 டன் அளவிற்கு காய்கனிகள் வந்து விற்பனையாகும். இது கடந்த சனிக்கிழமை 40 டன்னாக உயர்ந்தது. நேற்று முன்தினம் 70 டன்னாக உயர்ந்தது. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு 50 லட்சமாகும். நேற்று அதிகாலை முதல் 75 டன் அளவிற்கு இங்கு மட்டும் காய்கனிகள் வந்து குவிந்து விற்பனையாகின. 3 நாட்களில் இங்கு மட்டும் 185 டன் அளவிற்கு காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் சில காய்கனிகள் வரத்து குறைவாக உள்ளதால் அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக இந்த சந்தையில் முருங்கைக்காய் 5 கிலோ அளவில் மட்டுமே நேற்று வந்தது. இதனால் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 180ஆக விற்கப்பட்ட நிலையில் நேற்று 200 ரூபாயாக உயர்ந்தது. வெளிச்சந்தைகளில் ரூ.225 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் கத்தரிக்காயின் விலை கிலோ 110லிருந்து 125 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.125ஆக விற்கபடுகிறது. பல்லாரி விலை கிலோவிற்கு 65 ஆக உள்ளது.
மற்ற காய்கறிகளின் விலை(கிலோ) விபரங்கள் வெண்டைக்காய் 35, தக்காளி 28, புடலை 20, அவரை 65, பீர்க்கங்காய் 40, கொத்தவரை 24, பாகற்காய் (சிறியது) 50, பெரியது 24, மாங்காய் 130, இஞ்சி 74, பூசணிக்காய் 20, தடியங்காய் 15, சுரைக்காய் 12, கோவக்காய் 35, முள்ளங்கி 20, புதினா 35, கொத்தமல்லி 25, கருணை, சேனை, சேம்பு, சிறுகிழங்கு தலா 50, மரவள்ளி கிழங்கு 24, சீனி கிழங்கு 25 பனங்கிழங்கு (10 எண்ணம்) 60, தேங்காய் 42, உருளை 36, கோஸ் 24, பீட்ரூட் 40, சவ்சவ் 18. ரிங்பீன்ஸ் 76, பட்டர் பீன்ஸ் 170, பச்சைபட்டாணி 75, காலிபிளவர் 40 என்ற விலையில் விற்கப்படுகிறது. காய்கனிகளின் விலை உயர்ந்தாலும் பொங்கல் பண்டிகைக்காக மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக 100 கடைகள் மட்டுமே இயங்கும். கடந்த 3 தினங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு200 க்கும் மேற்பட்ட உழவர்கள் இங்கு கடைகள் அமைத்துள்ளனர். இதனால் தராசு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து 2 கடைகளுக்கு ஒரு தராசு கொடுக்கப்பட்டு சமாளிக்கப்பட்டது. சந்தை வளாகத்தில் நடைபாதை முழுவதும் கடைகளாக காட்சியளிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் கூட்டத்தையொட்டி விலையை அவ்வப்போது வியாபாரிகள் மாற்றுகின்றனர். நேற்றிரவு ஒரு கட்டு கரும்பு 250 என விற்கப்பட்டது. அதுவே நேற்று காலை 300 ஆக உயர்ந்தது. இதேபோல் ஒரு பனை ஓலை 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.