கரூர் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜிக்காக திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு நாள் முகாமிட்டு அந்த தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளார்.

4 கிலோமீட்டர் கடைவீதிகளில் நடைபயணமாக சென்று பிரச்சாரம் செய்தார். முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் பள்ளப்பட்டி பகுதியில் அவர் பிரச்சாரத்திற்கு நடைபயணமாக சென்ற போது முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக நின்று அவரை வரவேற்றனர். சிலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முஸ்லீம் பெண்களும் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். இது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. கடைவீதியில் பெண்கள் ஸ்டாலினுக்கு மாம்பழம், வாழைப்பழம் என்று கொடுத்து மகிழ்ந்தனர்.
வேலாயுபாளையம் பூஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் பிரச்சாரத்தில் பேசும் போதும் ஆளும்கட்சிகளான மத்திய மாநில அரசுகளை பொளந்து கட்டி பேசி தள்ளினார். இது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
அப்போது பேசிய திமுக. தலைவர் ஸ்டாலின்

வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக உங்களை தேடி, நாடி நான் வந்திருக்கிறேன்.
ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நம்முடைய கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிமணிக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவை தந்து சிறப்பான வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது உண்மை தானே. அதில் சந்தேகமில்லையே. தப்பித்தவறி வேறு யாருக்கும் ஓட்டுப்போடவில்லையே. கை சின்னத்திற்கு தானே ஓட்டு போட்டீர்கள் (அப்போது அங்கிருந்தவர்கள் ஆமாம்... ஆமாம்... என சத்தம் எழுப்பினர்).

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் பதவியை பறித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால் முதல்-அமைச்சராக இருக்க கூடிய பழனிசாமி ஊழல் நிறைந்தவராக இருக்கிறார். லஞ்சம் வாங்குகிற முதல்-அமைச்சராக இருக்கிறார், மக்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார், எனவே அவரை மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் ஒருவர் தான் செந்தில்பாலாஜி. அதனை கொடுத்ததற்காக 18 பேரின் பதவி பறிக்கப்பட்டது. அதனால் இந்த இடைத்தேர்தல் வந்து சேர்ந்திருக்கிறது.
செந்தில்பாலாஜி அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அந்த திட்டம் மிகவும் வரவேற்புக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைக்கள் 25,000 பேருக்கு 3 சென்ட் நிலம் கொடுக்கப்படும். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் கொண்டு செல்லப்படும் என்றார்.

தி.மு.க.,வுக்கு மெஜாரிட்டி: பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி; சாடிஸ்ட். புதுடில்லியில், 100 நாட்கள் போராடிய விவசாயிகளை அவர் சந்திக்கவில்லை. ஆனால், தொழிலதிபர்களை, நடிகைகளை சந்தித்தார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. கறுப்பு பணத்தை மீட்டு, 15 லட்சம் ரூபாயை ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போடுவேன் என்றார்.
அதன்படி, பணம் எதையும் போடவில்லை. அதேபோல், 18 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும், தி.மு.க., வெற்றிபெறும். தற்போது, தி.மு.க., கூட்டணிக்கு, 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அரவக்குறிச்சி உள்ளிட்ட, நான்கு சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும். அப்போது, 119 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டு, மெஜாரிட்டியுடன், தி.மு.க., ஆட்சி அமைக்கும். இதை உளவுத் துறை மூலம் தெரிந்த கொண்ட, அ.தி.மு.க., அரசு, சபாநாயகர் மூலம் மூன்று எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க திட்டமிட்டது. சபாநாயகரும், மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தி.மு.க., தரப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். தற்போது, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதேபோல கொட்டும் மழையில் அரியூர் பகுதியில் பேசும்போது, நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் மோடி எதிராக வாக்களித்து குளோஸ் செய்தீர்கள். அதே போல தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் செந்திபாலாஜியை வெற்றிபெற செய்தால் எடப்பாடி ஆட்சி குளோஸ் ஆகிவிடும் என பேசினார்.