கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் நகரில் வசிப்பவர் ராமசாமி மகன் சரவணன். இவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ஐயா தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது கடந்த ஆண்டு வெயில் கடுமையாக இருந்தது அதே போன்று இந்த ஆண்டும் வெயில் கொடுமை அதிகரித்து வருகிறது எனவே வெயிலின் கொடுமையில் இருந்து எங்களை பாதுகாப்பதற்கு ஊர்முழுக்க ஏசி (ஏர்கண்டிஷன்) அமைத்துத் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு சரவணன். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 112 டிகிரி கடந்து வெயில் வாட்டியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு முடியாமல் சிரமப்பட்டனர். வெயில் தாக்கத்தினால் பல்வேறு தோல் நோய்களும் ஏற்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு சரவணன் ஊர்முழுக்க ஏசி ஏற்படுத்தித் தருமாறு முதல்வருக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமில்லாததாக இருந்தாலும் கூட வரும் காலத்தில் அரசு செய்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் ஏற்கனவே மிக்சி, கிரைண்டர், டிவி என மக்களுக்கு இலவசங்களை கொடுத்து உள்ளது அரசு. அதேபோல் ஏசி வைக்கும் திட்டமும் இப்போதைக்கு கிண்டலாக இருந்தாலும் வருங்காலத்தில் நடைமுறைபடுத்த வாய்ப்பு உள்ளது. எப்படி இருப்பினும் ரொம்ப வெயிலா இருக்கு ஊர் முழுக்க ஏசி வேணும் என முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருப்பது சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.