விழுங்கியது கடப்பாரை, சுக்கு கசாயம் குடித்துவிட்டால் சரியாகிவிடுமா? அப்படி ஒரு நிலையில் இருக்கிறார்கள் இந்தியாவைச் சேர்ந்த 7 பேர். அவர்கள் செய்த தவறு.. மன்னிக்கவும்.. குற்றம் என்ன?
குறிப்பாக குழந்தைகள் மீது மட்டும் பாலியல் நாட்டம் உள்ளவர்களை Paedophilic என்பார்கள்.ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாஷே டிரெப்கே அந்த ரகம்தான். சிறுமிகள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கைதானான். அப்போது, அவன் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அவன், சிறுமிகளைத் துன்புறுத்திய படங்களும், வீடியோக்களும் அங்கே ஏராளமாகக் கிடைத்தன. கடந்த மே மாதம்தான் சிபிஐ முதற்கட்ட விசாரணையைப் பதிவு செய்தது. சாஷே டிரெப்கேவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சாஷே டிரெப்கே, தான் நிகழ்த்திய குழந்தைகள் வன்கொடுமையைக் படம் பிடித்து, வாட்ஸ்-ஆப் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள பலரிடம் பகிர்ந்துள்ளான். உலக அளவிலான இணைப்பிலுள்ள 29 குழுக்களில் 483 உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால், அவர்களில் 7 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் தூதரகம், அந்த ஏழு பேரின் செல்போன் நம்பர்களைக் குறிப்பிட்டு, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி சிபிஐ-க்கு தகவல் அளித்தது.
உலகளாவிய குழந்தைகள் வன்கொடுமை விவகாரத்தில் ஜெர்மனிக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தபோதிலும், கடந்த மே 10-ஆம் தேதி சிபிஐ முதல்கட்ட விசாரணையைத் துவங்கியது. அந்த செல்போன் நம்பர்கள் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்ததைக் கண்டுபிடித்தது. தற்போது அந்த எண்கள் செயலிழந்த நிலையில் இருந்தாலும் விசாரணையைத் தொடர்ந்து நடத்திவரும் சிபிஐ தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறது.
சாஷே டிரெப்கே வாட்ஸ்-ஆப் குரூப்பில் இணைந்திருந்த அந்த 7 பேர் இந்தியாவில்தான் கமுக்கமாக நம்மிடையே இருக்கின்றனர். அவர்கள் மட்டும்தானா? இதுபோன்ற வக்கிர மனம் கொண்டோர் பசுத்தோல் போர்த்திய புலிகளாக சத்தமில்லாமல் வேட்டையாடவும் செய்கின்றனர். வழக்கில் சிக்குபவர்கள், தண்டனை பெறுபவர்களெல்லாம் சொற்ப அளவில்தான். மக்கள்தான் எச்சரிக்கையுடனும் தொடர்ந்து கண்காணிப்புடனும் இருக்க வேண்டும்.