தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அண்மையில் ஆவடியில் 4 வயது சிறுமி சொந்தக்காரர் போல பழகிய பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு குளியலறையில் உள்ள பக்கெட்டில் திணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்திற்கு முன் அதேபோல் சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் அதே குடியிருப்பில் வேலை செய்யும் செக்யூரிட்டிகள், லிப்ட் ஆபரேட்டர்கள் என பதிமூன்று பேரால் பல நாட்களாக தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி நாளுக்குநாள் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகள் அரங்கேறிவரும் நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் பாட்டியுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்த 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரில் மூன்று பெண்களை கைது செய்த காவல்துறை சிறுமியை வன்கொடுமை செய்த புகாரில் அந்த ஐந்து பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பள்ளிப்படிப்பை ஒன்பதாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு தாய், பாட்டி, சகோதரன், சகோதரி என குடும்பத்தாருடன் சென்னை புரசைவாக்கத்தில வசித்து வந்துள்ளார் அந்த சிறுமி. ஜூலை 3ஆம் தேதி வீட்டில் சிறுமியும் பாட்டியும் மட்டுமே இருந்த போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. பாட்டியுடன் கோபித்துக் கொண்ட அந்த 15 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். தாய் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் காணாமல்போன சிறுமியை தேடி அலைந்தவர்கள் இறுதியில் புளியந்தோப்பு சரகம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினரும் சிறுமியை தேடியும் சிறுமி மீட்கப்படவில்லை. இந்நிலையில் என்ன செய்வதென்று குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்த பொழுது ஜூலை 9ம் தேதி ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தார் அந்த சிறுமி. கோபத்தில் போனவர் மனம் மாறி வந்து விட்டார் என அவரது குடும்பம் மகிழ்ச்சி அடைந்தது. சிறுமி மீண்டும் கிடைத்துவிட்டதாக காவல்துறையிடம் தெரிவிக்க அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு சென்றனர்.
காவல் நிலையத்தில் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறிய நேரத்திலிருந்து வீடு திரும்பும் வரை என்ன நடந்தது என அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத்தினரிடம் இதுபற்றி எதுவும் வாய் திறக்காத சிறுமி போலீசாரின் விசாரணையில் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி ஏற்கனவே அறிமுகமான வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெபினா என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரும் அடைக்கலம் தருவதாக வீட்டில் சேர்த்துக் கொண்டுள்ளார். தன்னுடன் தங்கியிருந்த சிறுமியை முபீனா பேகம் என்பவருடன் சேர்ந்து நிஷா என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜெபினா.
புரசைவாக்கத்தை சேர்ந்த நிஷா பாலியல் தொழில் செய்பவர் எனக் கூறப்படுகின்ற நிலையில், நிஷா தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்தச் சிறுமி தெரிவித்தார். நிஷா வீட்டில் ஐந்து பேர் அடைத்து வைத்து தன்னை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இரண்டு நாட்கள் கொடுமைக்கு பின் நிஷா தன்னை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜெபினா,முபீனா பேகம், நிஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறுமியை வன்கொடுமை செய்த 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்றுதான் சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்பட இந்த மசோதா வழிவகை செய்யும். குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி இதுபோன்ற எந்த செயல்களில் ஈடுபட்டாலும் அதிகப்படியான தண்டனை விதிப்பதற்கும், அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்யும். இப்படி சட்டங்களும், தண்டைனைகளும் கடுமையானால்தான் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும் என்பதே உண்மை.