முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன் ஆரம்பித்துள்ள மனிதவளச் சங்கத்தில் மூத்த உறுப்பினரும், அச்சங்கத்தின் செயலாளருமான கிருஷ்ணமூா்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், கடந்த 18.08.2020 அன்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
திருச்சி காந்தி மார்க்கெட், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் நகரப் பகுதிக்குள் காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளால், பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதோடு, தீ விபத்துகள் ஏற்பட்டால் அதனைக் கட்டுபடுத்த முடியாத அளவில், மிகவும் நெருக்கமான பாதைகளை உடையதாகவும் உள்ளது. அதோடு, தினமும் இங்கு 10 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்து இந்த வழக்கானது தொடரப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாகவே (26.03.2020) அன்று காந்தி மார்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்க வரும் பொதுமக்கள், சில்லரை வணிகர்கள் என பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், திருச்சி மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மார்கெட்டை மூடியது.
கரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காந்தி மார்கெட் திறக்கப்படாமல் இருந்தது. அதற்குக் காரணம் கிருஷ்ணமூா்த்தி என்பவர் தொடங்கிய வழக்கு தான். அவரது வழக்கை காரணம் காட்டி அதிகாரிகளும் அதனைத் திறக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், வியாபாரிகள் தரப்பில் காந்தி மார்கெட்டை யார் திறப்பது என்ற போட்டி ஏற்பட்டது.
இந்தப் போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் சார்பில் சுற்றுளாத்துறை அமைச்சா் வெள்ளமண்டி நடராஜனிடம் மனு கொடுக்கப்பட்டு காந்தி மார்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டங்களை அறிவித்ததோடு வியாபாரிகளிடம் இருந்து பணம் வசூலித்து மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் கிருஷ்ணமூா்த்தி தொடங்கிய வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்தனர்.
மேலும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாபாரிகள் நடத்திய போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு செலுத்தினார். அதன்பின் சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்து, இந்த வழக்குக் குறித்து சாதகமான தீா்ப்பு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தான் முடிந்த உதவியைச் செய்கிறேன் என்று கூறிய அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசி, தற்காலிகமாக காந்தி மார்கெட்டை மூடுவதற்குப் போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த 26.11.2020 அன்று விசாரணைக்கு வந்த காந்திமார்க்கெட் வழக்கில், தங்களுக்குச் சாதகமாகத் தீா்ப்பு வராது என்று முடிவு செய்து அறிஞர் அண்ணா மொத்தம் (ம) சில்லரை வணிகர்கள் நலச்சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஒரே நாளில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல், உயர்நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், மதுரை உயா்நீதிமன்றக் கிளை, இரண்டு பேர் கொண்ட அமர்வில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகிய இருவரும், காந்தி மார்க்கெட் தொடர்பாக விதிக்கப்பட்ட இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டதோடு, காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாகத் திறக்க அனுமதி வழங்கினர். மேலும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில் தற்போதுள்ள வசதி மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்து, அரசுத் தரப்பிலும், வியாபாரிகள் சங்கம் சார்பிலும் பதில் மனு, தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை டிச. 1-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
காந்தி மார்க்கெட் திறப்பதற்குக் காரணமாக இருந்ததாக 26.11.2020 அன்று மாலையே காந்தி மார்கெட் திறப்பில் கலந்துகொள்ள வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டிக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் கோவிந்தராஜலு, அமைச்சர் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது என்று கூறி அவரை தூக்கிவைத்துக் கொண்டாடினார். அதோடு வியாபாரிகள் எப்போதும் உங்களுடைய பக்கம் இருப்போம் என்று அமைச்சருக்கு உறுதியளித்தார்.
01.12.2020 காலை திருச்சி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து மார்கெட் திறக்க நீங்களும் உதவி இருக்கீங்க என்று சொல்லி அவருக்கு மாலை அணிவித்துப் பேசியபோது, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவா்கள் யாரை கை காட்டினாலும் அவா்கள் தான் இந்த கிழக்குத் தொகுதியின் அமைச்சர். எனவே, வியாபாரிகள் எப்போதும் உங்களுடைய பக்கம் இருக்கிறோம் என்றார்.
மேலும், நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் ஆவீர்கள் என்று சொல்லி வாழ்த்தினார். இந்த வியாபாரிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தச் சங்கங்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்றொரு பக்கம் காந்தி மார்கெட்டை திறக்க யார் காரணமாக இருந்தார்கள் என்பது மற்றொரு கேள்விகுறியாக உள்ளது. இது வியாபாரிகளுக்கே புரியாத புதிராக உள்ளது.