சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
அதே சமயம் கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு என இரு தரப்பிற்கும் இடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியைக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (20.08.2024) மீண்டும் நீதிமன்ற விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது. அதன்படி விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு மீதான விசாரணையைத் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதனையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.