Skip to main content

“கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை, தகுதியை பெற்றிருக்கவில்லை” - தலைமை நீதிபதி

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

Prohibition of appointment of Kirija Vaithiyanathan she is not eligible

 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

 

இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், “தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5இன் படி  நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். 

 

ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல்  சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது. இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரிஜா வைத்தியநாதன் நியமனம் என்பது விதிகளுக்கு உட்பட்டது எனவும், விதிகளை மீறி இந்த நியமனம் இல்லை எனவும் தெரிவித்தார். 

 

அப்போது நீதிபதிகள், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சட்டப்படி தேவைப்படும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என கருத்து தெரிவித்தனர். மேலும், அவரின் தகுதி குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாண்டது தொடர்பான அனுபவம் அவருக்கு இல்லை எனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்திற்குத் தடை விதிப்பதாகவும், மனு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். கிரிஜா வைத்தியநாதன் வரும் 19ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்