சட்ட விரோத பணப்பரிமாற்ற முறைகேட்டில் ஈடுபட்ட நீரவ் மோடியும், பிரதமர் மோடியும் ஒன்றா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராகுல் காந்தி பேசியது மிக மோசமான உரை, மோடி என பெயர் வைத்ததால் பிரதமர் மோடியும், நீரவ் மோடியும் ஒன்றா? சோனிய ராஜீவ் என்று பெயர் வைப்பதில் என்ன கஷ்டம்? பாமர மக்கள் இவர்கள் காந்தி குடும்பமோ அப்படி என்று ஏமாற்றப்படுவதற்கு காந்தியின் பெயரை பயண்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு குடும்பம், இன்று மோடியின் பெயரோடு தவறு செய்தவர் ஒருவர் பெயரை இணைத்து பேசுகிறது. இது எவ்வளவு தவறான காரியம்.
காந்தி பெயரை வைத்து ஏமாற்றும் உங்கள் குடும்பத்தை போல் மோடி ஏமாற்றவில்லை. இவர்கள் எல்லாம் நாட்டை முன்னேற்ற போகிறார்களா? தன் வாயலே ராகுல் கெட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு அமைப்பின் குரலாம் பாஜகவின் குரல். 22 மாநிலங்களை ஆண்டுக்கொண்டு மத்தியில் ஆட்சியையும் வைத்துக்கொண்டு, 60% மக்களின் ஆதரவை பெற்ற ஒரு கட்சியின் குரல், நாட்டின் குரலா? எதிர்கட்சியாக கூட இருக்க முடியாமல், 4 மாநிலத்தை கூட ஆழ முடியாத காங்கிரஸ் குரல், நாட்டின் குரலா? உங்களது ஒரு குடும்பத்தின் குரல்.
இதில் குஷ்பு வேறு பாஜகவின் குரல் தனிமனித மோடியின் குரலாம், இவர்களின் குரல் நாட்டின் குரலாம்.. இது ஒரு குடும்பத்தின் குரல். எவ்வளவு பெரிய தலைவரை வைத்துக்கொண்டு ராகுல் தான் தலைவர் என முன்னிலைப்படுத்துகிறார்கள். அது உங்கள் கட்சி, உங்கள் பிரச்சனை. எங்களுக்கு ஒன்றும் இல்லை. தேசபக்தி இயக்கத்தின் குரல் பாஜகவின் குரல். தேசபக்தர்களின் குரல். பல மாநிலங்களை இழந்து சுறுங்கிய காங்கிரஸ் கட்சி, தேசத்தின் குரல் என கூறிக்கொள்வது எவ்வாறு பொருந்தும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.