கர்நாடகாவில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.
ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 2 மணி முதல், விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இதுதொடர்பாக, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்ற வாதத்தின் போது மத்திய அரசின் வழக்கறிஞர் ரோஹத்கி தெரிவிக்கையில், 'காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆளுநரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது ஆளுநரின் கடமை. ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால், எந்த சட்டமும் இயற்றப்படாது என்றார்.
வாதத்தின் இடையே, 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், முகுல் ரோஹத்கி தெரிவித்தனர். சுமார் 4.30 மணியளவில் எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி சிக்ரி கூறினார்.
நீதிபதி ஏ.கே.சிக்ரி வாய்மொழியாக கூறுகையில், எடியூரப்பாவின் பதவியேற்புக்கு தடைவிதிக்க முடியாது. அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். இருப்பினும், நீதிபதிகள் இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. நாளை மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும். மே 15ம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.