சென்னை காவல் நிலையத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அந்தோனி (21). இவரை நீலாங்கரை போலீசார் நேற்று இரவு வழிப்பறி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்தோனியை கடுமையாக தாக்கி விடிய, விடிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் காவல்துறையினரின் துன்புறுத்தலை தாங்க முடியாத அந்தோனி மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவம் குறித்து அந்தோனி குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து ஆத்திரமடைந்த அந்தோனியின் குடும்பத்தினர் போலீசாரே அந்தோனியை அடித்து கொன்றுள்ளனர் என நீலாங்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்நிலையம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து கூடுதல் கமிஷ்னர் சாரங்கன் தலைமையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, இதே காவல்நிலையத்தில் 3 வருடத்திற்கு முன்பு விசாரணைக்காக சிறுவன் ஒருவனை அழைத்து வந்த காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதேபோல் சமீபத்தில் உதவி ஆய்வாளர் இருவருக்கு இடையே மாமூல் பிறிப்பதில் தகராறு ஏற்பட்டதும் இதே காவல்நிலையம் தான். இப்படி தொடர்ச்சியாக நீலங்கரை காவல்நிலையம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
Published on 18/05/2018 | Edited on 18/05/2018