தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நேற்று (11.01.2020) நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் ஊராட்சியில் சனிக்கிழமை (11.01.2020) அன்று ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் 2- வது வார்டு உறுப்பினர் ராமச்சந்திரன், 9- வது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ராமச்சந்திரன், அவரது எதிர் வீட்டை சேர்ந்த 3- வது வார்டு உறுப்பினர் முருகனிடம் ஏன் வாக்களிக்கவில்லை என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ராமச்சந்திரன் முருகனை கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த முருகன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.