சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று (06-07-24) அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதில், தனது அண்ணனைக் கொலை செய்ததது மட்டுமல்லாமல், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டி வந்தததால், இதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகக் கூறியுள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.