திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சியை சேர்ந்த பாஜக மூத்த உறுப்பினரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் 2 ஆவது வட்ட திமுக செயலாளரும் வழக்குரைஞருமான எஸ். ஹரிஹரன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் செய்திருந்தார். அந்த புகாரில், உறையூர் திருத்தாந்தோணி சாலை சத்யா நகரைச் சேர்ந்த எம். சீனிவாசன் (66) என்பவர், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிமீது சமூக வலைத்தளங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் சீனிவாசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வெள்ளிக்கிழமை இரவு அவரைக் கைது செய்து ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், சீனிவாசனை சொந்த பிணையில் (ஜாமீனில்) செல்ல அனுமதி வழங்கியது. சீனிவாசன் பாஜக மாவட்ட செயற்குழு மூத்த உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.