சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (06.08.2024) மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கல்வித் துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்துத் துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது. அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அந்த அறிக்கையை முன் மாதிரியாகக் கொண்டு திட்டக் குழு சார்பாக ஆய்வறிக்கை ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தைப் பெருக்கும் ஆலோசனைகளைச் சொல்லுங்கள். அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்து மனிதர்களையும் உடனடியாகச் சென்று சேரத் திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்துப் பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்கான இலகுவான நிர்வாகச் சீர்திருத்தங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்கும் நான், இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பணியை, பொறுப்பை வழங்க விரும்புகிறேன். திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்களை. சாதனைகளைச் சொல்லும் வகையில் ஒரு மாபெரும் கருத்தரங்கைச் சென்னையில் நீங்கள் நடத்திட வேண்டும். அதில் பல்துறை அறிஞர்கள். ஊடகவியலாளர்கள் போன்றவர்களைப் பங்கேற்க வைத்து, அவர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று, அதனை வெளியிடுமாறு துணைத் தலைவர் ஜெயரஞ்சனைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான. நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், திட்டக்கழு குழு உறுப்பினர்களான இராம. சீனுவாசன், ம. விஜயபாஸ்கர், மு. தீனபந்து, சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன், ஜோ. அமலோற்பவநாதன், கு. சிவராமன், நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ். சுதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.