புதுக்கோட்டை மாவட்டம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி. தமிழ்நாட்டில் இவரை அறிந்தவர்கள் அதிகம். ஒரு அரசுப் பள்ளி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதைத் தான் பணியாற்றிய மாங்குயிலும் தற்போது பணியாற்றும் பச்சலூரிலும் செய்து காட்டியவர். பொதுமக்கள், தன்னார்வலர்களின் பங்களிப்போடு பள்ளி வளாக நடைபாதை முழுவதும் பேவர் பிளாக், ஓரங்களில் அழகான செடிகள், வகுப்பறைகள் ஏ.சி. ஸ்மார் போர்டு, சாக்பீஸ் இல்லா வெள்ளை போர்டு, கண்காணிப்பு கேமரா, தூய குடிநீர் குழாய், சீப்பு, கண்ணாடி, பவுடர், தபால் பெட்டி, புகார் பெட்டி, புத்தகங்கள் வைக்க அலமாரி, புத்தக சுமையைக் குறைக்க ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் எனப் பல்வேறு உத்திகளைப் பின்பற்றி வருகிறார். இவை அனைத்து ஒவ்வொரு வகுப்பறையிலும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மதிய உணவு நேர்த்தி, தலைமை ஆசிரியர் அறையில் கேமராக்களின் கண்காணிப்பு திரை, மைக் இப்படி அத்தனை வசதிகளையும் அற்புதமாய் செய்து வைத்துள்ளார். அதனால் தலைமை ஆசிரியரை மாணவர்கள், கிராம மக்களுக்கும் பிடிக்கும்.
இவரது பள்ளியை மட்டும் நவீனப்படுத்தினால் போதாது என்று நினைத்தவர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பள்ளிகளை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல கிராம மக்களும் பச்சலூர் பள்ளியை வந்து பார்த்து வியந்து போனாலும் தங்கள் கிராம பள்ளியை மாற்றுவோம் என்று சொல்லிப் போகின்றனர். சேந்தன்குடி, புதுக்கோட்டை விடுதி போன்ற பல பள்ளிகள் மாறியுள்ளது. ஆனால் வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு பள்ளி சேர்ந்த பெற்றோர்கள் பச்சலூர் பள்ளியைப் பார்த்து வியந்ததோடு தலைமை ஆசிரியரை தங்கள் பள்ளிக்கும் அழைத்து எங்கள் பள்ளியை மாற்ற உங்கள் ஆலோசனையும் உதவியும் தேவை என்று சொன்ன போதே தன் கையில் இருந்து ஒரு பெருந்தொகையைக் கொடுத்து ஆச்சரியமூட்டினார்.
அடுத்த நாளே புள்ளாச்சிகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்து மாற்றங்களைப் பட்டியலிட்டார். அமைச்சர் மெய்யநாதன் உதவியோடு தன்னார்வலர்கள், பெற்றோர்கள் பங்களிப்பில் பள்ளியின் நவீன வளர்ச்சிகள் தொடங்கி சில மாதங்களில் பச்சலூருக்கு அடுத்து புள்ளாச்சிகுடியிருப்பு பள்ளி அனைத்து வசதிகளும் பெற்ற பள்ளியாக மாறிய போது அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி மகள் சன்மதிக்கு இன்று வியாழக்கிழமை மாலை நிச்சயதார்த்த விழா நடக்க உள்ளதை அறிந்த வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு பகுதி மக்கள், தங்கள் பள்ளி வளர உதவிய தலைமை ஆசிரியர் ஜோதிமணி இல்ல விழாவுக்கு நாங்கள் தாய்மாமன் சீர் கொண்டு போறோம் என்றனர். புள்ளாச்சிகுடியிருப்பில் இருந்து தனி பேருந்தில் மாணவர்களுடன் கிராம மக்கள் ஏறி வந்து அறந்தாங்கி விழா மண்டபம் அருகே இறங்கி மா, பலா, வாழை என முக்கனிகளோடு தட்டுத் தாம்பூலங்கள் ஏந்தி வானத்தில் வர்ணஜாலம் காட்டிய வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்துக் கொண்டு தாய்வீட்டுச் சீதனமாய் மண்டபத்திற்குள் நுழைந்த போது அத்தனை பேரும் வியந்து, நெகிழ்ந்தனர்.
உறவினர்கள் தான் இப்படி சீர் கொண்டு வருவார்கள் ஆனால் என்று வியந்தவர்களிடம், 'தலைமை ஆசிரியர் ஜோதிமணி குடும்பம் எங்கள் உறவினர்கள்' தான் என்று கெத்தாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். தங்கள் பள்ளி வளர காரணமான வேறு ஒரு தலைமை ஆசிரியர் இல்ல விழாவிற்குச் சீர் கொண்டு வந்த புள்ளாச்சிகுடியிருப்பு மக்களை அனைவரும் பாராட்டினர். தலைமை ஆசிரியர் குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர்.