கடந்த மாதம் 19-ந் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விமானம் மூலம் திருச்சி வந்தனர். வைகோவையும், சீமானையும வரவேற்பதற்காக வந்த இரு கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையே விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. மோதலின்போது ஒருவரையொருவர் தாக்கி கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தி இரு தலைவர்களையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விமானநிலைய போலீசார் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீதும், ம.தி.மு.க.வினர் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் வழங்க கோரி சீமான் உள்பட 7 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி 7 பேருக்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி சீமான், அவரது கட்சியை சேர்ந்த பிரபு, கரிகாலன், குகன்குமார், கந்தசாமி, துரைமுருகன், இனியன் பிரகாஷ் ஆகிய 7 பேரும் வியாழக்கிழமை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 5-ல் சரண் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு நாகப்பன் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.