
நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது. கரோனா பரவலைத் தடுக்க அரசும் மருத்துவத்துறையும் போராடிவருகிறது. இருப்பினும் நிலைமையைக் கட்டுபடுத்த முடியவில்லை.
இதனால் ஆளும் கட்சி அமைச்சர்கள் முதல் எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரை பாதிக்கபட்டுள்ளனா். இந்த நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் ஊரை சீல் வைப்பது போல் அரசு ஊழியா்கள் பாதிக்கப்பட்டால் அவா்கள் பணியாற்றும் அரசு அலுவலகமும் பூட்டப்படுகிறது.
அந்த வகையில் தான் எந்தச் சூழ்நிலைகளிலும் பூட்டப்படாத ஓரே அரசு அலுவலகமான காவல் நிலையம், கரோனா வைரஸ் தொற்றால் இன்றைக்கு பூட்டப்படுகிறது.
குமாி மாவட்டத்தில் மொத்தமுள்ள 38 காவல் நிலையங்களில் அடுத்தடுத்து 8 காவல் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது. மணவாளக்குறிச்சி ஆய்வாளருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் ராஜாக்கமங்கலம் மற்றும் அவா் அதிகாரத்திற்கு உட்பட்ட மண்டைக்காடு காவல்நிலையமும் பூட்டப்பட்டது.
அதே போல் குளச்சல் காவல்நிலையத்தில் ஓருவருக்குத் தொற்று ஏற்பட்டதால் அந்தக் காவல்நிலையமும் பூட்டப்பட்டது.
இப்படித் தலைமைக் காவலா்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் தொடா்ந்து ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, கோட்டாா், வடசோி எனக் காவல் நிலையங்கள் பூட்டப்படுகின்றன.
இந்த நிலையில் கடைசியாக மாவட்டத்தில் பொிய காவல்நிலையமான தக்கலை காவல்நிலையத்தில் தலைமைக் காவலா் ஒருவருக்கு நேற்று ஜூலை 16 அன்று கரோனா தொற்று உறுதியானதால் மாலையில் அந்தக் காவல்நிலையமும் பூட்டப்பட்டது. தற்போது தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் நிலையம் தற்காலிகமாகச் செயல்படுகிறது.